Tuesday, April 28, 2020

40 - மேலும் சிலர்

கௌரி அம்மாள்
-----------------------
குடும்ப சூழ்நிலை காரணமாக,சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முயலாமல் போனவர்.

குடும்பக் கப்பல் நிலை தடுமாறாமல் இருக்க  தாய் எவ்வளவு முக்கியம் எனக் கூறும் "கடிவாளம்" எனும்  புதினத்தை 1948ஆம் ஆண்டு எழுதினார்..

"வீட்டுக்கு வீடு" என்ற இவரது சிறுகதி தொகுப்பும் வந்துள்ளது.

ஆனந்தி
-------------------

காலத்தால் அழியாத 'பொன்னியின் செல்வன்" படைத்த கல்கியின் புதல்வி.இப்புதினம் மொத்தம் 165அத்தியாயங்கள் நான்கு பாகங்களாக வந்துள்ளது.

இதன் 26ஆம் அத்தியாயத்துடன் கல்கி அமரர் ஆனார்.பின் அவர் விட்டுச் சென்ற குறிப்புகளை வைத்து..சற்றும் சுவாரசியம் குறையாமல் அப்புதினத்தை எழுதி முடித்தார் ஆனந்தி.

கல்கியில் பல பயணத்தொடர், ஆன்மீகத் தொடர்களை எழுதியுள்ளார்.

கல்கியில் இவர் எழுதிய "மலைச்சாரல் மாதவி" புதினம் இன்றளவும் பேஸப்படும் ஒன்றாகும்


கமலா பத்மநாபன்
------------------------
தஞ்சாவூரைச் சேர்ந்த டெபுடி கலெக்டரான, பிரம்மஞான சபையைச் சார்ந்த டி.வி.கோபாலசாமி ஐயரின் பேத்தி. சங்கீதத்திலும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர். வயலின் கற்றிருந்தார். முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினாலும், அவரின் பெரும் கவனம் தமிழின் மீதே இருந்தது.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் இளம் வயதில் (32) இயற்கை எய்தினார். 1933ல் இருந்து 1942 வரை சுமார் பத்து வருடங்களில் இவரின் படைப்பாற்றல் வியக்க வைப்பவை.
எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்து குறு நாவல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இதழ்களான பாரதமணி, ஜகன் மோகினி, கலைமகள், சுதேசமித்திரன் போன்றவற்றில் கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதியவர். அவரின் காலத்தில் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவராக மதிக்கப்பட்டவர். 


Monday, April 27, 2020

39 -ரமணி சந்திரன்



1938ஆம் ஆண்டு ஜூலய் மாதம் பத்தாம் தேதி பிறந்தவர்  இவர்.சொந்த ஊர் திருச்செந்தூர்.

அப்பா பெயர் கணேசன்.அம்மா..கமல சுந்தரதேவி

 குடும்பச் சூழல், அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’.

தெருக்கோடி, பஸ் ஸ்டாண்ட், பால் கார்டு மாற்றுமிடம், சூப்பர் மார்க்கெட்... இப்படி எங்கே போனாலும் சரி, அங்கே எழுத்தாளர் ரமணி சந்திரனின் ரசிகைகளை பார்க்க முடியும்.

கணவர் பாலச்சந்திரன்! 'அஸ்ஸாம் டிரிப்யூன்’, 'மிட் டே’ உட்பட வட இந்திய பத்திரிகை பலவற்றுக்கு பிஸினஸ் ரெப்ரசென்டேட்டிவாக இருந்திருக்கிறார்.

என்னைச் சுற்றி நடப்பதைத்தான் எழுதுகிறேன்.ஆனால் என் கதைகளில் தற்கொலை,வன்கொடுமை,பாலியல்
அத்துமீறல் எல்லாம் இருக்காது என்பார் இவர்.

குடும்பச் சூழல், ஆண்-பெண் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளைக் கருவாகக் கொண்டு சுமார் 170 க்கும் மேலான குடும்பக் கதைகளை எழுதியுள்ள முன்னணி எழுத்தாளர் ரமணி சந்திரன்


அவர்  தங்கை கணவர் 'ராணி’ பத்திரிகையின் ஆசிரியர் அ.மா.சாமி. முழுசாக அ.மாரிசாமி!

'' 'ராணி’யில் வரிசையா இரண்டு சிறுகதைகள் எழுதித்தர... இரண்டுமே பிரசுரமாயிடுச்சு.. அப்புறம்தான் இவருக்குக் கவலை வந்துட்டது.. சொந்தக்காரங்கனுதான் தான் எழுதினதையெல்லாம் பிரசுரிக்கிறார்களோனு சந்தேகம்.  அந்த சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள . ராணியில ஒரு சிறுகதைப் போட்டியின் போது தன் கதையின் தரத்தைச் சோதிக்கணும்னு  அந்தக் கதையை லட்சுமி சீனிவாசன்னு இவருக்குத் தெரிந்த,பழக்கமான ஒரு பெண் பேர்ல எழுதினார்.  அந்தப் போட்டியில் லட்சுமி சீனிவாசனுக்குத்தான் முதல் பரிசு! அப்புறம்தான் தன்னம்பிக்கையோட நாவல்கள் எழுத ஆரம்பிச்சார்!

அவர் மாமாவிற்கு இது தெரிய வர,'அட...! நம்ம ரமணி பொண்ணா இதெல்லாம் எழுதினது’னு ஆச்சரியப்பட்டார்.

அந்த மாமா யார் தெரியுமா?

. சி.பாலசுப்பிரமணியம் என்கிற சி.பா.ஆதித்தனார்தான் ரமணிசந்திரனின் சொந்தத் தாய் மாமா!

ராணியிலும் தினத்தந்தியிலும் சூடுபிடித்த ரமணி சந்திரனின் எழுத்துக்கள், அப்புறம் குமுதம், கல்கி, கலைமகள் என்று எல்லா பத்திரிகைகளிலும் வர ஆரம்பித்தன.

38 - உஷா சுப்ரமணியம்



வாரணசி எனும் காசியில் பிறந்தவர் உஷா.அவரது அப்பா ஒரு  விஞஞானி.பனாரஸ் யூனிவெர்சிடியில் கெமிஸ்ட்ரி புரஃபெசர் ஆக இருந்தவர்.இவர் குழந்தையாய் இருக்கையில் இவரைப் பார்த்துக் கொண்டது பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் தான்.அவர்தான் இவர்கள் குடும்பத்தின் காட்மதர் எனலாம்.


பல டி.வி. தொடர்களை எழுதி இயக்கியவர்.உலக எழுத்தாளர் மகாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளரும் இவரே!


யுனிசெஃப், உலக வங்கிகள் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு ஆவணப்படங்கள் எடுத்துத் தந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இவர் கல்லூரி படிப்பை ஆறு தங்கப் பதக்கங்களுடன் வாங்கி வெளியே வந்த போது,இவர் தாய்..தந்தை மேலே படிக்கச் சொன்னபோது இவர் சொன்ன பதில் "நான் கதை எழுதப்போகிறேன்" என்றதுதான்.பிறகு கல்யாணத்திற்குப் பிறகு மெட்ராஸ் யூனிவெர்சிடியில் ஜர்னலிசம் படித்து முடித்தார

ஒருநாள் திடீரென் அஒரு கதைக்கான கரு மனதில் தோன்ற அதை எழுதி..அதற்கு "வடிகால்" எனப் பெயரிட்டு விகடனுக்கு அனுப்ப..அந்த முதல் கதையே முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

அடுத்து "மனிதன் தீவல்லன்" விகடனில் தனிப் புத்தகமாகவே வந்தது.

அடுத்து அமரர் ராமரத்னம் நாவல் போட்டியில் இவர் எழுதிய நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

கணையாழியில் "நீயுமா புரூட்டஸ்" என்ற கதை வந்தது.

பிறகு சாவியில் "சில நினைவுகள் சில நிகழ்ச்சிகள்" எனும் தொடர்.

சிறுகதைகள் நானூறுக்கும் மேலாக எழுதியுள்ளார்.30நாவல்கள் எழுதியுள்ளார்.

தொலைக்காட்சிக்காக 'லேடீஸ் ஹாஸ்டல்"  என்ற ஸ்கிரிப்ட் எழுதினார்.அது ஹிட்.பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

உஷா சுப்ரமணியம் ‘பெண் ஒரு கண்ணோட்டம்’ கட்டுரையில் சொல்லியுள்ளது-.
நான் வாழ்வில் நிறையப் போராடியிருக்கிறேன். நிறைய விட்டுக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் ஒரு பெண்ணாக வாழ்ந்ததற்குப் பெருமைப்படுகிறேன்.





Sunday, April 26, 2020

37 - கமலா விருத்தாச்சலம்



1917ல் திருவனந்தபுரத்தில், பொதுப் பணித்துறையில் புகழ்பெற்ற ஒப்பந்ததாரராகத் திகழ்ந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளை என்பவரின் மகளாகப் பிறந்தார் கமலா.(1917 – 1995)

பின் தனது பதினைந்தாம் வயதில் விருத்தாச்சலம் என்பவரை மணந்தார்.(விருத்தாச்சலம் என்று ஒரு பெயரா? என் அவியக்க வேண்டாம்.பழனி,சிதம்பரம், திருப்பதி என்று பெயர் வைப்பதில்லையா? அதுபோலத்தான் இதுவும்)

அந்த விருத்தாச்சலம்தான் புகழ் பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் ஆவார்.

1935க்குப் பின் எழுதத் தொடங்கியவர், சின்னஞ்சிறு சம்பவங்களை கதையாக்குவதில் வல்லவர்.தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாயுள்ளன.


`வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாள்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் எனப் பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். கதை எழுத உட்கார்ந்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்த பிறகே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்.

என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன்னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூட தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்' என்று தன் கணவர் புதுமைப்பித்தனைப் பற்றிய தன் நினைவுகளை கமலா விருத்தாசலம் எழுதியுள்ளார் – புதுமைப்பித்தனின் `சம்சார பந்தம்’ என்னும் நூலில்.

இவரின் சிறுகதைகள் "காசுமாலை' என்னும் பெயரில் நூலாக 1971-ம் ஆண்டில் வந்துள்ளது.

இவர் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் புதுமைப்பித்தன் சொன்னதுபோல சாகாவரம் பெற்ற கதைகளை எழுதியிருக்கிறார் என உறுதியாகச் சொல்ல முடியும்.

`திறந்த ஜன்னல்' என்கிற அவரது சிறுகதை அதிகம் பேசப்பட்ட கதையாகும்.

19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்துப் பெண் நோரா இப்சனின் `பொம்மை வீடு' கதையில் சந்தேகப்பட்ட கணவனைவிட்டுத் தைரியமாக வெளியேறினாள். ஆனால், 20-ம் நூற்றாண்டிலும் கணவனைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாதவளாகத் தமிழ்ப் பெண் இருக்கிறாள் என்பதை ஜீவனுள்ள கதையாக வடித்திருக்கிறார்.

1995ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

Saturday, April 25, 2020

36 - கி சாவித்திரி அம்மாள்



முற்போக்கு சிந்தனைக் கொண்ட சவித்திரி அம்மாள் 1898 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் நன்கு அறிந்தவர்.

செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,அவர் இரு புடவைகளே வைத்திருப்பார்.ஒன்று துவைத்து காயப் போட்டிருப்பார்.ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பார்..அவ்வளவுதான்.ஆடம்பரம் இல்லா வாழ்வு வாழ்ந்தவர்.

பதினைந்து வய்தில் எழுதத் தொடங்கினார்.அந்த வயதினிலேயே ஆங்கில துப்பறியும் நாவல் ஒன்றினை "ஹேமலதை" என்ற பெயரில் மொழி
பெயர்த்தார்.பின்னர் இது நூலகாவும் வந்தது

. F.W. Bains எழுதிய ’Digit of the moon’ எனும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு ‘காலைப்பிறை’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

1956ல் "கல்பகம்" என்ற புதினத்தை எழுதினார்.காதலன் தன்னைப் புறக்கணித்ததும். எந்த வித நீண்ட விவாதமோ..வசனங்களோ இல்லாமல்..அவனைக் காதலித்தது தன் தவறு என்ற பெண் பாத்திரத்தைப் படைத்தார் அதில்.

இவரது கதைகள் கல்கி, கலைமகள் ஆகிய இதழ்களில் வெளி வந்தன.

1958ல் அவரது சொத்துகளின் பெரும்பகுதியை தானமாகக் கொடுத்தார்மயிலையில் இயங்கி வரும் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி இவர் பெயரைத் தாங்கியே இருக்கின்றது..

தவிர்த்து, லேடி சிவசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளி,மற்றும் வித்யா மந்திர் பள்ளிகள் இயங்குவதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

எளிமை,கல்வியறிவு,யாரையும் சாரா சுதந்திரம்,சுய நம்பிக்கை,இலக்கிய ஆர்வம், ஈகைக் குணம் ஆகியவற்றின் மொத்த உருவாய்த் திகழ்ந்தவர் 1992ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

சாவித்திரி அம்மாளின் சகோதரி கி சரஸ்வதி அம்மாளும் ஒரு எழுத்தாளர் ஆவார்.
மனோதத்துவரீதியில் "கன்றின் குரல்" என்ற வித்தியாசமான நூலினை எழுதியவர்.இளம் மாணவன் ஒருவன் தன்னைவிட மூத்தப் பெண்ணைக் காதலிப்பதைக் கருவாகக்கொண்ட நாவல் "calf love" என்பதை "கன்றின் குரல்" என மாற்றினார்.

.

35 - எம் ஏ சுசீலா





எம் ஏ சுசீலா ,1949ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 27ஆம் நான் காரைக்குடியில் பிறந்தவர்.
இவர் ஒரு சிறுகதை எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,சொற்பொழிவாளர்,பெண்ணியவாதி.

இவரது தந்தை அனந்தராம், காவல்துறைக் கண்காணிப்பாளர்.தாய் சோபனாதேவி தலைமை ஆசிரியை.

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மதுரை, ஃபாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.பணீக்காலத்திலேயே, பகுதிநேர ஆய்வாளராக தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

36ஆண்டுகள் பணிக்குப் பின்னர் 2006ல் ஓய்வு பெற்றார்.

இவரது முதல் சிறுகதை "ஓர் உயிர் விலை போகிறது" 1979ஆம் ஆண்டு அமரர் கல்கை சிறுகதைப்போட்டியில் முதல் பரிசினைப் பெற்றது. தொடர்ந்து எண்பதிற்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் கல்கி, கலைமகள், ஆனந்த விகடன்,தினமணிக்கதிர்,அமுதசுரபி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவர் சிறுகதைகள் சில, மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,வங்காளம் ஆகிய மொழிகளீல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

170 மொழிகள், 2,300-க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் என உலக அளவில் கொண்டாடப்படும் ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் பல ஆயிரம் பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் எம்.ஏ.சுசீலா.

.கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. "கண் திறந்திட வேண்டும்" என்னும் இவரது சிறுகதை, இயக்குநர் பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக "நான் படிக்கணும்" என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.


ஆக்கங்கள்

நாவல்..

யாதுமாகி

சிறுகதைத் தொகுப்புகள்

பருவங்கள் மாறும் (1985)

புதிய பிரவேசங்கள்

தடை ஓட்டங்கள்

தேவந்தி

கட்டுரை நூல்கள்
---------------------------

விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களீல் பெண்கள்- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

பெண் இலக்கியம் - வாசிப்பு

இலக்கிய இலக்குகள்

தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்


  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' புதினம் - ஆங்கில வழித் தமிழாக்கம் (2007) 
  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'இடியட்’ புதினத்தின் மொழியாக்கம் 
  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குறுங்கதைகளின் மொழிபெயர்ப்பு தஸ்தயெவ்ஸ்கி கதைகள் 
விருதுகள்
-----------------
  • பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா (2002)
  • சிறந்த பெண்மணி(2004)
  • சிறுகதைக்காக, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அமரர் சுஜாதா விருது (2013) [1]
  • அசடன் மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்



எந்த வகையான தயாரிப்புகளோ, முன் ஆயத்தங்களோ இல்லாமல் தற்செயலாகத்தான் என் முதல் மொழியாக்கப் பணியில் இறங்கினேன். சொல்லப்போனால், ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டபோது தஸ்தயேவ்ஸ்கியின் எந்த எழுத்தையும் நான் வாசித்திருக்கவில்லை. பேராசிரியப் பணியிலிருந்து ஒய்வுபெற்றிருந்த நேரத்தில் என்னை வந்தடைந்த ஒரு வாய்ப்பு அது. சிறு வயது முதல் என்னைப் பற்றிக்கொண்ட இலக்கிய வாசிப்பும், புனைவு எழுதுவதற்காக மொழியைக் கூர்தீட்டத் தொடர்ந்து மேற்கொண்டுவந்த முயற்சிகளும் எனது மொழிபெயர்ப்புக்குத் துணை நின்றிருக்கின்றன எனலாம். ஒரு பணியாகத் தொடங்கிய எனது மொழிபெயர்ப்புப் பயணத்தைப் பிறகு படைப்புச் செயல்பாடாக நான் முன்னெடுத்ததற்கு தஸ்தயேவ்ஸ்கி எனும் மாமேதையின் ஆளுமையே காரணம்.
அதிக பக்கங்கள் கொண்ட நாவலை வாசிப்பதே சவால் நிறைந்தது. உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் எப்படி இருந்தன?
இளமைக்காலம் முதல் இன்று வரையிலும் வாசிப்பு உற்ற தோழமையாக இருந்துவருவதால் எந்த மொழி வாசிப்பென்றாலும் எத்தனை ஆயிரம் பக்கங்கள் என்றாலும் வாசிப்பு என்பது ஒருநாளும் சோர்வூட்டும் அனுபவமாக இருந்ததில்லை. ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை வாசிக்கத் தொடங்கி ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயேவ்ஸ்கி மிகவும் நெருக்கமானவராகிவிட்டார். தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிகழும் மாயம் அது. ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது எந்த முயற்சியும் செய்யாமல் எவரோ டிக்டேட் செய்வதுபோல தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கியிருந்தன. மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் மண்டிக்கிடக்கும் சபலங்களையும் சலனங்களையும் அழுக்குகளையும் மட்டுமல்லாமல் அன்பையும் காருண்யத்தையும் அளவற்ற மனித நேயத்தையும் அவரது எழுத்து வெளிச்சத்துக்கு இட்டுவந்துவிடும். அந்த மாமேதையின் வார்த்தைகளுக்குள் உருகி, உட்கலந்து, கசிந்து, கண்ணீர் மல்கி என்னையே தொலைத்துவிட்டிருக்கிறேன். கூடுவிட்டுக் கூடுபாய்வதுபோல தஸ்தயேவ்ஸ்கியே என்னுள் புகுந்துகொண்டு தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டுபோகிறாரோ என்ற மனமயக்கம்கூட எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எட்டு மாதங்களில் ‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பின் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு என்னை ஆட்கொண்டு இயக்கியது அதுவே.
அதைத் தொடர்ந்து நீங்கள் மொழிபெயர்த்த ‘அசடன்’ நாவலும் பக்க அளவில் இன்னும் பெரியது. ஆனால், ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவல் மொழி சவாலானது இல்லையா?
‘குற்றமும் தண்டனையும்’ நாவலைப் போல ஒருமுகத்தன்மை கொண்டதல்ல ‘அசடன்’. கிட்டத்தட்ட 2000 பக்கங்களுடன் நான்கு பாகங்களாகப் பல்வேறு முடிச்சுகளுடனும் பலரின் உணர்வுப் போராட்டங்களுடனும் விரிந்துகொண்டுபோகும் நாவல் ‘அசடன்’. நாவலில் இடம்பெறும் பிரெஞ்சுத் தொடர்களுக்காகவும் சொல்லாட்சிகளுக்காகவும் தில்லியில் இருக்கும் ஜேஎன்யூ பல்கலைக்கழக பிரெஞ்சுத் துறைக்கு ஒரு மாணவநிலையில் பல நாள் அலைந்துதிரிந்த அனுபவமும் அதிலுள்ள சிக்கலான பல முடிச்சுகளைத் தமிழ் மொழியில் அவிழ்க்க நான் கைக்கொண்ட முயற்சிகளும் என் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதவை. மிகப் பிரம்மாண்டமான ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ எனும் இரண்டு உலகப் பேரிலக்கியங்களை மொழிபெயர்த்ததைவிடவும் கடுமையான சவாலை முன்வைத்த ஆக்கம் ‘நிலவறைக் குறிப்புகள்’. தஸ்தயேவ்ஸ்கியின் பிற நாவல்கள்போல எண்ணற்ற கதைமாந்தர்களையோ, விறுவிறுப்பான கதைப்பின்னலையோ, மூலக்கதையோடு பிணைந்துவரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டிருக்காமல் எதிரும்புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி தன்னைத்தானே முரணிக்கொண்டும் பழித்துக்கொண்டும் ஓயாமல் உள்ளுலையும் மனங்களின் விசித்திரங்களை ஒரு தனிமனிதனின் குரலாக்கி முன்னிறுத்தியிருப்பார்.
உங்களது மொழிபெயர்ப்பு பாணி என்ன?
நான் பின்பற்றும் பாணி எனக்கே வியப்பூட்டுவது; விசித்திரமானதும்கூட. மொழிபெயர்க்கும் எண்ணத்தோடு தஸ்தயேவ்ஸ்கியின் எந்த நாவலை வாசிக்கத் தொடங்கினாலும் நான்கைந்து அத்தியாயங்கள் கடந்ததுமே மொழியாக்கத் தொடங்கிவிட வேண்டும் என்ற வேகம் ஆட்கொண்டுவிடும். முழு நாவலையும் வாசித்து முடிக்கும் வரை பொறுமை காக்க இயலாத உத்வேகம் அது. ஒரு படைப்பாளியின் பித்தேறிய மனநிலைக்கு நிகரானது. அதுவரை வாசித்து முடித்திருக்கும் பகுதியில் சிலவற்றை மொழிபெயர்ப்பேன். அடுத்து, நாவல் வாசிப்பைத் தொடர்ந்துகொண்டிருப்பேன். முழு வாசிப்பு, மொழிபெயர்ப்பு முடிந்ததும் பிறகு சரளம், சொற்கோவை, தொடரமைப்பு, ஆங்கில மொழியாக்கத்தோடு ஒப்பிடல் என செம்மையாக்கம் தொடரும். என் ஐந்து மொழியாக்கங்களிலும் பின்பற்றியது இந்த வழிமுறையைத்தான். என் உள்ளுணர்வு என்னைச் செலுத்திய பாதை அது.
தஸ்தயேவ்ஸ்கியின் ஒரே படைப்புக்கு வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் நடந்திருக்கின்றன. உங்கள் மொழிபெயர்ப்புக்காக யாருடைய மொழிபெயர்ப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்?
தஸ்தயேவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் மொழியாக்கமே நம்பகத்தன்மை வாய்ந்ததென்று பரிந்துரைக்கப்படுவதால் அவருடையதையே அடிப்படையாக வைத்துக்கொண்டேன். கூடுதல் தெளிவு தேவைப்படும் இடங்களில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம், வெர்ட்ஸ்வர்த் க்ளாஸிக்ஸ், ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவெர்சிடி ப்ரஸ், நியூயார்க் மாடர்ன் லைப்ரரி போன்ற முன்னணிப் பதிப்பகங்கள் வெளியிட்ட மொழியாக்கங்களும் எனக்கு உதவியிருக்கின்றன.
தஸ்தயேவ்ஸ்கியின் எந்தப் பாத்திரம் உங்களுக்கு நெருக்கமானது?
அப்படிப் பிரித்துச் சொல்ல என்னால் இயலவில்லை. அவரது ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பாத்திரமும் எனக்கு நெருக்கமானதே. ரஸ்கோல்நிகோவோடு ஒன்றிய என் உள்ளம், அசடன் மிஷ்கினின் மாசுமருவற்ற இயல்பின் மீது மாளாத நேசம் கொண்டது. நிலவறைக்குள் தன்னைத் தொலைத்து சுயவதை செய்துகொண்ட மனிதனுக்காகக் கசிந்தது. இரட்டையரில் வரும் கோல்யாட்கினின் பரிதவிப்பில் நெகிழ்ந்தது. மொழிபெயர்ப்பாளருக்கு நிகழும் இத்தகைய நெருக்கம் ஓர் அபேத நிலை. மூலத்துக்குப் பக்கத்தில் மொழியாக்கத்தைக் கொண்டுசேர்க்கத் தன்னிச்சையாய் அமைந்துவிடும் துணை அது.
தஸ்தயேவ்ஸ்கி நடந்துசென்ற வீதிகளை நீங்கள் நேரில் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?
பள்ளி நாட்களில் மாமல்லபுரம் சுற்றுலா சென்றபோது அங்கே சிவகாமியையும் ஆயனச் சிற்பியையும் தேடிய மனநிலையே மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கு சென்றபோதும் இருந்தது.
தஸ்தயேவ்ஸ்கி திடீரென நேரில் உங்கள் முன் தோன்றினால் அவரிடம் என்ன பேசுவீர்கள்?
குக்கிராமம் ஒன்றின் கடைக்கோடியில் தையல் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் எளிய மனிதர் ஒருவர் ‘அசடன்’ நாவலைப் படித்துவிட்டு என்னிடம் மனமுருகிப் பேசியதையும், தமிழ் மொழிபெயர்ப்புகளின் வாசகர் ஒருவர் தன் மகனுக்கு மகிழ்நன் என்று தூய தமிழில் பெயர் வைத்துவிட்டு அதன் முன்னொட்டாக ஃபியதோர் என்று சேர்த்திருப்பதையும் தமிழ் வாசகர்கள் அவரிடம் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாக அவருடன் பகிர்ந்துகொள்வேன்.
புனைவாளராக அல்லாமல் மொழிபெயர்ப்பாளராக அடையாளம் காணப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்த நாற்பது ஆண்டுகளில் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாவலையும் எழுதியிருக்கிறேன். அதைக் காட்டிலும் தஸ்தயேவ்ஸ்கி என்ற மாமேதையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளம், மிகச் சிறந்த அங்கீகாரங்களைப் பெற்றுத்தந்திருப்பதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆயினும், என் தாயின் வாழ்க்கையைப் புனைவாக்கி ஒரு வாழ்நாள் தவம்போல நான் இயற்றிய ‘யாதுமாகி’ நாவல் எனக்களித்த மனநிறைவு அலாதியானது. தடைகள் நிறைந்த பாதையில் மனத்திண்மை என்ற ஒற்றை மந்திரத்தைப் பற்றியபடி வென்ற என் தாய்க்கு மட்டுமல்லாமல் அவர் போன்ற எத்தனையோ பல ஆளுமைகளுக்கும் நாவல் வழி என்னால் எழுப்ப முடிந்த ஓர் எளிய நினைவுச்சின்னம் அது

Friday, April 24, 2020

34- பூரணி



1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் ராமசாமி ஐயர்,சீதாலட்சுமி தம்பதிகளுக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர் சம்பூர்ணம்.

இவர் பூரணி என்ற பெயரில் 80ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள்,கவிதை,கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார்.

ராமசாமி ஐயர் ஒரு தமிழ்ப்பண்டிதர்.1864ல் பிறந்த இவர் தொல்காப்பியத்திற்கு எளிய உரையினை எழுதியவர்.


பூரணி 1927 இல் கவிதை எழுத .ஆரம்பித்தார். 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். 1937 இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தன் இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பாரத ஜோதி இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி ஆகிய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். திண்ண இணைய இதழிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

  • பூரணி கவிதைகள் காலச்சுவடு வெளியீடு, 2003
  • பூரணி நினைவலைகள் (தன்வரலாறு), 
  • பூரணி சிறுகதைகள்
  • செவிவழிக் கதைகள்,

  • 2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருது
  • 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும்

2013 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று அதிகாலை 2 மணி அளவில், நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி’ என்னும் சம்பூர்ணம் அம்மாள் கயிலாயப் பதவி அடைந்தார்.

இவரது மகள் கிருஷாங்கணியும் ஒரு கவிஞர், எழுத்தாளர் ஆவார்.இவரது இயற்பெயர் பிருந்தா ஆகும். இவரது கணவர் பெயர் நாகராஜன் ஆகும். இவர் கோவை மாவட்டம் தாராபுரத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இவர் கானல் சதுரம் (1998), கவிதைகள் கையெழுத்தில் (2001) ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  பறத்தல் அதன் சுதந்திரம் (2001) எனும் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாசிரியர் ஆவார். இவர் ஓவியங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர் ஆவார்.