Wednesday, April 1, 2020

வை.மு.கோதைநாயகி ((1901-1960)



அந்தக் குழந்தையின் வயது ஐந்தரை,

அவளுக்கு அழகாக புதுப் பட்டுப் பாவாடை, சட்டை போட்டு..ஆண்டாளின் கொண்டையிட்டு..பூ வைத்து..கண்களில் மை தீட்டி,பொட்டு வைத்து இருந்தார்கள்.

அக்குழந்தையும், கண்ணாடியில் தன் முகத்தை இப்படியும், அப்படியும் திருப்பி அழகுப் பார்த்தது.

அப்பொழுது அக்குழந்தையின் சித்தி சொன்னாள்,:குழந்தே! இன்னிக்கு உனக்கு கல்யாணம்".

ஆம்..அந்த ஐந்தரை வயதுக் குழந்தைக்கு அன்று திருமணம்.

மணமகன் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு.ஸ்ரீனிவாச ஐயங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு.பார்த்தசாரதி.

ஆமாம்...மணமகள் பெயர் என்ன ..சொல்லவேயில்லை அல்லவா?

அவர்...

1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் நாள்
செங்கல்பட்டு அருகில் உள்ள நீர்வளூரில் வாழ்ந்த என்.எஸ்.வெங்கடாச்சாரி,பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்., பின்னாளில் துப்பறியும் புதினம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர்,மேடைப் பேச்சாளர்,கவிஞர்,சமூகநல ஊழியர்,இதழாசிரியர்,,,இந்திய விடுதலைக்காக போராடியவர் என பல துறைகளிலும் சிறந்து விளங்கிய வை.மு.கோதைநாயகி ஆவார்.115 புதினங்களை எழுதியவர்.தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கியவர் இவர்.

பிறந்த ஒரு வயதிலேயே தனது தாயை இழந்தார்.அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சித்தப்பா மனைவியுமான கனகம்மாளும் அவரை வளர்த்தனர்.தன் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியிடம் நாலடியார்,தேவாரம்,திருவாசகம்,கம்பராமாயணம்,திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

கோதைநாயகியின் புகுந்தவீட்டினர் தீவிர வைணவ மரபின் வழி வந்தவர்கள்."வைத்தமாநிதி முடும்பை குடும்பம்" என்று பெயர் பெற்ற அக்குடும்பத்தினருக்கு, அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும்,வைணவ சமூகத்திலும் தனி மதிப்பு இருந்த்து.அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு முன்னால் வை.மு.என்ற எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டனர்.வைத்த நாநிதி என்பது அக்குடும்பத்தினரின் குலதெய்வமான திருக்கோளூர் பெருமாளின் பெயராகும்.முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊராகும்.கோதைநாயகிக்கும் திருமணத்துக்குப் பின்னர் "வை.மு."
என்று குடும்பப் பெயரை இணைத்து வை.மு.கோதைநாயகி என அழைத்தனர்.

கோதைநாயகியின் வெற்றிக்கு ,அவரது செயல்களுக்கு என அனைத்திற்கும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதிதான்.

திருமணத்தின் போது  குழந்தையாய் இருந்ததால், பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பில்லை.பிறகு பார்த்தசாரதி அவரைக் கல்வி கற்கச் செய்தார்.அவர் பார்த்தசாரதியின் தாயாரிடம் தெலுங்கு கற்றார்.

பள்ளிக்குச் செல்லாதவராய் இருந்தாலும்,வீட்டில் எப்போதும் கோதைநாயகி திருவாய்மொழி, பாசுரங்கள்பாடிக் கொண்டிருப்பார்.இதனால் இவருக்கு தமிழ் சரளமாய் வரத் தொடங்கியது.முதலில் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வந்தார்.எல்லாக் கதைகளும் இவரது கற்பனைக் கதைகள்.இதைக் கண்ட இவர் கணவர், இவரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு அவரை பல நாடகங்களுக்கு அழியத்துச் சென்றார்.அவற்றை ரசித்த கோதைநாயகிக்கு தானும் நாடகங்களை எழுத வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது.

அதேவேளையில், பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஏதேனும் செய்ய எண்ணினார்.இந்நிலையில் அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத் தெரிந்ததால் ..இவர் சொல்ல, இவர் தோழி பட்டம்மாள் என்பவர் எழுதத் தொடங்கினார்.இப்படி எழுதி, நூலாக வெளியான நாடகம் "இந்திர மோகனா".நூல் வெளியான ஆண்டு 1924.இந்நாடகத்தை பலர் கேட்டு வாங்கி நடித்தனர்.அனைத்து பத்திரிகைகளும் நாடகத்தைப் பாராட்டின.இந்நூலின் வெற்றி, இவரை மேலும் எழுதத் தூண்டியது.பட்டாம்மாளிடம் தமிழை எழுதவும், படிக்கவும் கற்றார்.

பின் இவர் எழுதிய பல சமூக நாடகங்கள் அரங்கேறின. அவற்றில் சில அருணோதயம்,வத்சகுமார்,தயாநிதி..

இவற்றைத்தவிர இவர் எழுத்தில் இரு சிறுகதைத் தொகுப்புகள்,மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடைநூல்கள் வெளியாகியுள்ளன.

கோதைநாயகி "வைதேகி" எனும் புதினத்தை எழுதினார்.அதை வடுவூர் துரைசாமி ஐயங்கார்   தனது "மனோரஞ்சனி" இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார்.பின் அவரது அறிவுரைப்படி, 1925ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிவராது நின்றுபோயிருந்த "ஜகன்மோகினி" மாத இதழை வாங்கி அதில் தன் புதினத்தை வெளியிட்டதுடன் , தான் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்புவரை 35 ஆண்டுகள் அப்பத்திரிகையை நடத்தி வந்தார்.


இவர்,இந்து-முஸ்லிம் ஒற்றுமை,பெண் விடுதலை, நாட்டுப்பற்று,மதுவிலக்கு,விதவை திருமணம் ஆகியவற்றை தன் தன் எழுத்துகள் மூலம் வலியுறுத்தினார்.1937ல் சொந்த அச்சகம் ஒன்றினை நிறுவி அச்சுத்தொழிலிலும் சிறந்து விளங்கினார்.

சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்த வைமு வின் பேச்சுகளைக் கேட்க மக்கள் கூடுவார்கள்.பேச்சின் நடு நடுவே சின்னஞ்சிறு குட்டிக் கதைகள் சொல்வார்.காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன் மிக்கவராகத் திகழ்ந்தார்.தீரர் சத்தியமூர்த்தி,காமராசர், ராஜாஜி ஆகியோர் அம்மையாருடன் நட்புடன் இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் கோதைநாயகி கர்நாடக இசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவராக இருந்தார்.காங்கிரஸ் மேடைகளில் நாட்டுப்பற்று பாடல்களைப் பாடினார்.வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் ஆற்றலை வெளிக் கொணர்ந்தார். அந்த வரிசையில் வந்தவர்களில் புகஹ்ழ் பெற்ற டி.கே.பட்டம்மாளும் ஒருவர்.

அத்துடன் மட்டுமல்லாது பல பாடல்களையும் எழுதியுள்ளார் இவர்.அவையெல்லாம் சேர்த்து "ஈசை மார்க்கம்" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

பாரதியார், வை மு கோ விற்காகவே "ஆடுவோமே ,பள்ளுப் பாடுவோமே" என்ற பாடலை புனைந்ததாகவும், பின்னர் டி.கே.பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பதும் செய்தியாகும்.

விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு

-------------------------------------------------------------

பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமின்றி வை மு கோ விற்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக சமூகத் தொண்டரும், தேச பக்தருமான அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. ஸ்ரீனிவாச ஐயங்கார் இல்லத்திற்கு 1925ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை புரிந்தார்.அவரை கோதைநாயகி சந்தித்தார்.பின்னர், பட்டாடையே உடுத்தி வந்தவர் கதர் புடவையை அணியத் தொடங்கினார்.மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களை அணிவதில்லை என உறுதி பூண்டு, இறுதிவரை அதனைக் கடைப்பிடித்தார்.

பின்னர் அம்புஜம் அம்மாள்,ருக்மணி இலட்சுமிபதி,வசுமதி ராமசாமி ஆகியோருடன் இணியந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

1931ல் மகாத்மா கனஹ்தி, கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழியப்பு விடுத்தபோது,அதை ஏற்ற கோதைநாயகி, திருவல்லிக்கேணி பெசன்ட் தெருவில் உள்ள என் கே டி பள்ளி இருக்கும் இடத்தின் அருகே மறியல் செய்தார்.சென்னை சைனாபஜார் அருகே தடையை மீறி ஊர்வலம் சென்றதால்,தலைவர்கள் பலருடன் இவரும் கைது செய்யப்பட்டார்.ஆறுமாத சிறைத் தண்டனையும்,நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

1932ல் "லோதியன் கமிஷனுக்கு" எதிராக நடந்த போரட்டத்தில் கலந்து கொண்டும்,அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் வேலூர் சிறையில் அடைத்தனர்.அங்கு இருந்த ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார்.சிறைக்கதைகளை காந்திய பாதைக்குக் கொண்டு வர முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.சிறையில் இருந்த போது "ஸோதனையின் கொடுமை","உத்தமசீலன்" ஆகிய நூல்களை எழுதினார். அவர் சிறையில் இருந்த காலத்தில் ஜகன்மோகினி பத்திரிகையை இவரது கணவர் பார்த்தசாரதி தொடர்ந்து நடத்தினார்.

திரைப்படத்துறை
---------------------------

1930 களில் அம்மையார் "டாக்கி" என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட திரைத்துறையிலும் தன் முத்திரையினைப் பதித்தார்.திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். அவர் அப்பணியில் இருந்தபோது ,தாம் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள அத்திரைப்பட அரங்கிற்குத் தன்னை யாரும் அறியாமல் இருக்கத் தலையில் முக்காட்டிக் கொண்டு சென்று திரைப்படத்தைப் பார்ப்பது அவர் வழக்கம்.அப்படி அவர் தணிக்கை செய்த "அதிர்ஷ்டம்" என்ற திரைப்படக் காட்சிகள் மீண்டும் திரையிட்டு இருப்பதை அறிந்து அப்படத்தை மீண்டும்  தணிக்கை செய்ய அனுப்பினார்.இவ்வாறு தாம் செய்யும் பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செய்தார்.

இவர் நாவல்கள் பல பின்னர் திரைப்படங்கள் ஆயின."அனாதைப் பெண்" என்ற நாவலை ஜூபிடெர் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாக தயாரித்தனர்.பின், "தயாநிதி" என்ற நாவல் கே எஸ் கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் "சித்தி" என்ற பெயரில் திரைப்படமானது.1937ல் "ராஜமோகன்",தியாகக்கொடி,நளினசேகரன் ஆகிய புதினங்களும் திரைப்படமாயின.சித்தி படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருது இவர் இறந்த பின் இவருக்கு வழங்கப்பட்டது.


இறுதிக்காலம்
-----------------------

இவர் இலவசமாக குழந்தைப்பேறு மருத்துவமும் பார்ப்பதுண்டு.

1948ஆம் ஆண்டு காந்தி மறைந்த பின்னர் 13ஆம் நாள் சாம்பல் நாடு முழுதும் கரைக்கப்பட்டது.சென்னையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பின் காந்தியின் நினைவாக மார்ச் மாதம் இரண்டாம் நாள் "௳காத்மாஜி சேவா சங்கம்" என்ற சங்கத்தைத் திருவல்லிக்கேணியில் நிறுவினார்.அதன் வாயிலாக ஏழைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,பெண்களுக்கும் பல்வேறு உதவிகள் புரிந்தார்.

இவரின் தேசியசேவையை பாராட்டி காங்கிரஸ் அரசு செங்கல்பட்டிற்கு அருகே 3 ஏக்கர் நிலமும், மற்றொரு இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வழ்ங்கினர்.ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாபாவேயிடம் வழங்கிவிட்டார் இவர்.

1956ஆம் ஆண்டில் இவரது ஒரே மகனான ஸ்ரீனிவாசன் திடீரென இறந்தார்.அவர் மறைவு கோதைநாயகியை நிலைகுலையச் செய்தது.மகன் இறந்தும் தான் மட்டும் இருக்கின்றோமே என உண்ணாமல், உறங்காமல் உடலை வருத்திக் கொண்டார். அதனால் கொடிய காச நோய்க்கு ஆளானவர், உரிய சிகிச்சைப் பெற்றும் பலனின்றி 1960ஆம் ஆண்டு ஃபெப்ருவரி மாதம்20ஆம நாள் மருத்துவமனையிலேயே இறந்தார்.


No comments:

Post a Comment