Sunday, April 26, 2020

37 - கமலா விருத்தாச்சலம்



1917ல் திருவனந்தபுரத்தில், பொதுப் பணித்துறையில் புகழ்பெற்ற ஒப்பந்ததாரராகத் திகழ்ந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளை என்பவரின் மகளாகப் பிறந்தார் கமலா.(1917 – 1995)

பின் தனது பதினைந்தாம் வயதில் விருத்தாச்சலம் என்பவரை மணந்தார்.(விருத்தாச்சலம் என்று ஒரு பெயரா? என் அவியக்க வேண்டாம்.பழனி,சிதம்பரம், திருப்பதி என்று பெயர் வைப்பதில்லையா? அதுபோலத்தான் இதுவும்)

அந்த விருத்தாச்சலம்தான் புகழ் பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் ஆவார்.

1935க்குப் பின் எழுதத் தொடங்கியவர், சின்னஞ்சிறு சம்பவங்களை கதையாக்குவதில் வல்லவர்.தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாயுள்ளன.


`வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாள்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் எனப் பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். கதை எழுத உட்கார்ந்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்த பிறகே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்.

என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன்னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூட தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்' என்று தன் கணவர் புதுமைப்பித்தனைப் பற்றிய தன் நினைவுகளை கமலா விருத்தாசலம் எழுதியுள்ளார் – புதுமைப்பித்தனின் `சம்சார பந்தம்’ என்னும் நூலில்.

இவரின் சிறுகதைகள் "காசுமாலை' என்னும் பெயரில் நூலாக 1971-ம் ஆண்டில் வந்துள்ளது.

இவர் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் புதுமைப்பித்தன் சொன்னதுபோல சாகாவரம் பெற்ற கதைகளை எழுதியிருக்கிறார் என உறுதியாகச் சொல்ல முடியும்.

`திறந்த ஜன்னல்' என்கிற அவரது சிறுகதை அதிகம் பேசப்பட்ட கதையாகும்.

19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்துப் பெண் நோரா இப்சனின் `பொம்மை வீடு' கதையில் சந்தேகப்பட்ட கணவனைவிட்டுத் தைரியமாக வெளியேறினாள். ஆனால், 20-ம் நூற்றாண்டிலும் கணவனைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாதவளாகத் தமிழ்ப் பெண் இருக்கிறாள் என்பதை ஜீவனுள்ள கதையாக வடித்திருக்கிறார்.

1995ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

No comments:

Post a Comment