Wednesday, April 15, 2020

23 - ஜோதிர்லதா கிரிஜா






1935ஆம் ஆண்டு  திண்டுக்கல் வத்தலக்குண்டு எனும் ஊரில் 1935ஆம் ஆண்டில் பிறந்தவர் ஜோதிர்லதா கிரிஜா .

 ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார்.
 தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்..

பள்ளிப் பருவத்தில் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். இவரது முதல் சிறுகதை 1950 ஆம் ஆண்டில் "ஜிங்லி" என்ற பத்திரிகையில்ரா கி ரங்கராஜன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. 1968 இல் ஆனந்த விகடனில் எழுதிய கலப்பு மணம் பற்றிய அரியும் சிவனும் ஒண்ணு என்ற சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக பெரியோர்க்கான எழுத்தாளராக அறியப்பட்டார்.தபால், தந்தி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
‘நம் நாடு’ எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.
1975 இல் ஃபெமினாவில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். இவரது ஆக்கங்கள் டாக்டர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸின் POET இதழில் தொடர்களாக வந்துள்ளன. விம்ன்ஸ் எரா, தி இந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் எழுதியுள்ளார்.


  முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராகக் குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்ந்து சமீபத்தில் “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டை வாசகர்களுக்குத் தந்துள்ளார்.  சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணி பாராட்டப்பட வேண்டிய சாதனை.


இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த 60 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்படப் பல மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் வடித்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தைச் சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று  வெளியிடப் பட்டது. முன்னர் பத்திரிகை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும்  Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இவரது சில நூல்கள்

1. படி தாண்டிய பத்தினிகள்
2. இதயம் பலவிதம்
3. வசந்தம் வருமா?
4. மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5. வாழத்தான் பிறந்தோம்
6. சாதி இரத்தத்தில் ஓடுகிறது
7. நாங்களும் வாழ்கிறோம்
8. குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
9. இல்லாதவர்கள்
10. அவசரக்கோலங்கள்


பரிசுகளும்..விருதுகளும்

  • தினமணி கதிர் நாவல் போட்டியில் பரிசு
  • கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டியில் பரிசு
  • லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு
  • அமுதசுரபி நாவல் போட்டி
  • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது
  • திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு
  • தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு
  • மன்னார்குடி, செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி என்ற சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து பரிசும், விருதும் அளித்தது.
  • கம்பன் கழகத்தின் சிவசங்கரி விருது


எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வருகிறார் ஜோதிர்லதா கிரிஜா.

No comments:

Post a Comment