Friday, April 10, 2020

11 - சிவசங்கரி



நாவல், சிறுகதை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் இயங்கி வரும் சிவசங்கரி சென்னையில் 1942, அக்டோபர் 14ல் பிறந்தார். இவரது தந்தை பெயர் சூர்யநாராயணன்.தாயார் ராஜலட்சுமி.

இவர் தன் பள்ளிப் படிப்பை சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் சாரதா வித்யாலயா பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை சென்னையிலுள்ள எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரியிலும் முடித்தார்.

இவருக்கு 1963ல் சந்திரசேகரன் என்பவருடன் திருமணம் நடந்தது.

எந்த எழுத்துமே ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டுமேயன்றி, அழிவுப் பாதைக்கு அழைப்பதாக இருக்கக் கூடாது என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர். 

150க்கும் மேற்பட்ட சிறுகதைகள்/குறுநாவல்கள், 36 நாவல்கள், 14 பயணக்கட்டுரைத் தொடர்கள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 2 வாழ்க்கை சரிதங்கள், பிற எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. 

இவரது முதல் கதை "அவர்கள் பேசட்டும்" குழந்தையில்லா இளம் தம்பதியர் மன உணர்வுகளை சித்தரித்தது.கல்கியில் 1968ல் வெளியானது.

 ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற செயல் திட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
1994-ல்
அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த 18 இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களில் சிலரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். அந்தத் தொகுப்புகள் வெளிவர அவர் செலுத்திய உழைப்பை எழுத்தில் வடிக்க இயலாது.

"சூரிய வம்சம்" என்ற பெயரில்(சுய சரிதை) 2019ல் இரண்டு பாகங்களாக
நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.

 மத்திய திரைப்படத் தணிக்கைக்குழுவின் நியமன உறுப்பினராக 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தனிமனித விழிப்புணர்வின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் ‘அக்னி’ (AGNI – Awakened Group for National Integration) என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.

இவரது சில நாவல்கள்

-------------------------------
எதற்காக? - 1970
திரிவேணி சங்கமம் - 1971
நண்டு - 1975
நதியின் வேகத்தோடு - 1975
மெள்ள மெள்ள - 1978
47 நாட்கள் - 1978
அம்மா, ப்ளீஸ் எனக்காக. - 1979
ஒரு மனிதனின் கதை - 1980
பாலங்கள் - 1983
கருணைக் கொலை - 1984


வாழ்க்கை வரலாறுகள்

-----------------------------

இந்திராவின் கதை - 1972
அப்பா - 1989

குழந்தைகளுக்காக பேசும் புத்தகம்

-------------------------------------------
அம்மா சொன்ன கதைகள்
(புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது ) - 1996

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு

செயல் திட்டம்
--------------------------------------------

நான்கு பாகங்கள்

பாகம் 1 - தெற்கு - 1998
பாகம் 2 - கிழக்கு - 2000
பாகம் 3 - மேற்கு - 2004
பாகம் 4 - வடக்கு - 2009



1983 ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சிவசங்கரி அவர்களின் ” பாலங்கள் ” கதை இன்றும்,என்றும் பேசப்படுகிற ,ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.
மூன்று தலைமுறைப் பெண்கள் வரலாற்றினைச் சொல்லும் நாவல் இது.முதலில் 1907 முதல் 31 வரை..ஏழு வயது சிவகாமிக்கு 11 வயது சுப்புணியுடன் மணம்.13 வயதில் அவள் பெரியவளாகி..வரிசையாகக் குழந்தைகள் பெற்று 20 வயதில் விதவை வாழ்க்கை

அடுத்து..1940-54 களில் மைதிலியின் வாழ்க்கை.ஓரளவு படித்து 18 வயதில் திருமணம்

அடுத்து 1965க்குப் பிறகு....இந்தத தலைமுறை சாருவின் வாழ்க்கை.பின் கணவன் சரியில்லாததால் விவாகரத்து.

இப்படி மூன்றும் தலைமுறைப் பெண்களைப் பற்றிய நாவல்.

நண்டு,மற்றும் 47 நாட்கள் ஆகிய இவரின் கதைகள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டன. 
இவர் எழுதிய "அவன்" என்ற நாவல், "சுபா" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டது.

முன்னால் பிரதமர் இந்திரா காந்தி,ஜி டி நாயுடு, ஜி கே மூப்பனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றினையும் எழுதியுள்ளார்.

இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி ,அன்னை தெரசா ஆகியவர்களுடன் நேர்காணல் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார்.
” ஒரு மனிதனின் கதை” மற்றும் ” கருணைக்கொலை” இந்த இரண்டு தொடர்கதைகளும் வெளிவந்தபொழுது மிகுந்த பரபரப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தின.

” சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது” என்கிற கட்டுரைத்தொடர்  மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வேண்டிய அத்தனை அறிவுரைகளும்,கருத்துக்களும் அந்தப்புத்தகத்தில் இருக்கும். 

சிவசங்கரி பரதநாட்டியக்கலைஞர் என்பதால் அவர் கதைகளில் ” இசை” இயல்பாகவே இருக்கும். 

1983ஆம் ஆண்டு "பாலங்கள்" என்ற நாவலுக்காக கஸ்தூரி ஸ்ரீனிவாசன் விருது பெற்றார்.

1988ஆம் ஆண்டு "சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது" என்ற கட்டுரைத் தொடருக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதைப் பெற்றார்.

இவருடைய பாரத தரிசனம் என்னும் நூலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த  நூலாசிரியர்க்கான பரிசினைப்பெற்றவர்.( 2010 ஆண்டில்)

1990 ஆம் ஆண்டு பாரதிய பாஷபரிசத் விருது இவருக்கு வழங்கப்பட்டது.மேலும் தமிழ் அன்னை விருதினையும் பெற்றார்.

கண்தானம் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பல ஆயிரக்கணக்கான மக்களை இறந்தபின் தங்கள் கண்களை தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வைத்தது.


No comments:

Post a Comment