Friday, April 3, 2020

4 - லட்சுமி




1923, மார்ச் 21 அன்று திருச்சி மாவட்டம் தொட்டியம் என்கிற ஊரில் பிறந்தார் லட்சுமி.இவர் இயற் பெயர் திரிபுரசுந்தரி.இவருடைய தந்தை ஒரு மருத்துவர்.அவர் பெயர் ஸ்ரீனிவாசன்,தாயின் பெயர் பட்டம்மாள். 

மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த லட்சுமி தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.இவர் தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவிலும் சில ஆண்டுகள் வாழ்ந்தவர் ஆவார்.

பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று, முசிறியில் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார். திருச்சியில் ஹோலிக்ராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு என்று முடித்து சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவப் படிப்பில் நுழையும் வரை திரிபுரசுந்தரிக்கு பொருளாதாரப் பிரச்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.


ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு திரிபுரசுந்தரியின் குடும்பத்தில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. தந்தையார் சீனிவாசன் தன் மகளிடம் படிப்பு தொடர்வதற்குப் பண உதவி செய்ய இயலாமையை விளக்கி அவரை ஊருக்குத் திரும்பும் படி வலியுறுத்தினார்.

ஆனால் திரிபுர சுந்தரிக்கு தன் படிப்பினைப் பாதியில் விட மனமில்லை. ஏதோ துணிவில் ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வாசனைச் சந்தித்து தன் நிலைமையை விளக்கி தன் படிப்பு தொடர உதவும் படி வேண்டினார். அவர் எழுதித் தரும் கதைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியில் ஊக்கம் அடைந்தவராக தன் முதல் சிறுகதையான “தகுந்த தண்டனையா?” என்கிற சிறுகதையை எழுதி விகடனுக்குத் தந்து தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.

கல்லூரி மாணவியாக இருந்ததாலும் சக மாணவர்களின் கேலியைத் தவிர்க்க எண்ணியதாலும் லக்ஷ்மி என்கிற புனைபெயரிலேயே எழுத ஆரம்பித்த திரிபுரசுந்தரி தன் படிப்பு முடியும் முன்பாகவே தொடர்கதைகள் வரை எழுத ஆரம்பித்தார். இவருடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக வாசன் அளித்த ஆதரவு மிகவும் உயரியது. மாதத்திற்கு மூன்று சிறுகதைகள் மூலம் (அவை வெளிவந்தாலும் வராவிட்டாலும்) இவருக்குப் பணம் கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பணம் கிடைக்கும் வசதிக்காகத் தான் தொடர்கதையே எழுதினார் லக்ஷ்மி. இவருடைய முதல் தொடர்கதை “பவானி”.
இவருடைய சிறுகதைகள் குடும்பப் பாங்குடனும், ஆபாசம் ஒருசிறிதும் இன்றியும், பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்குக் கிடைத்தது.
படிப்பு முடியும் முன்பே “பெண்மனம்” என்கிற இன்னொரு நாவலும் எழுதி அதில் கிடைத்த பணத்தைத் தன் இளைய சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்து தன் குடும்பத்துக்கும் உதவிகரமாக விளங்கினார் லக்ஷ்மி..இந்த நாவலே பின்னர் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில், சிவாஜி கனேசன் நடிக்க "இருவர் உள்ளம்" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
லக்ஷ்மியின் மருத்துவப்படிப்பு முடிந்து அரசு மருத்துவராகப் பணியும் கிடைத்த பிறகு வாழ்க்கையின் பொருளாதாரப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. 1955-ல் கண்ணபிரான் என்பவருடன் திருமணம் ஆனது. இது காதல்மணம் என்பதுடன் கலப்பு மணமும் கூட. தென்னாப்பிரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்ட தஞ்சைப் பிள்ளை வகுப்பினைச் சேர்ந்த கண்ணபிரானை இலங்கையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் சந்தித்துக் காதல் வயப்பட்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி. கண்ணபிரான் ஒரு முதுகலைப் பட்டதாரி. தென்னாப்பிரிக்காவில் பத்திரிகைத் துறையில் இருந்தவர். கணவருடன் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார் லக்ஷ்மி. அங்கேயும் அரசு மருத்துவராகப் பணி கிடைக்க பெருமகிழ்ச்சியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்கிற மகன் பிறந்தார்

1968-ஆம் ஆண்டு கண்ணபிரான் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்த லக்ஷ்மி 1977-ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.
அதன்பிறகு 1987-ஆம் ஆண்டு மரணமடையும் வரை முழுநேர மருத்துவப் பணியில் ஈடுபடாமல், பகுதிநேர மருத்துவ ஆலோசகராகவும் முழுநேர எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஏராளமாக எழுதிக் குவித்தார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.

(தென் ஆப்பிரிக்காவில் இருந்த காலகட்டத்தில் பெற்ற அனுபவங்களை ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல ஆண்டுகள்' என்ற பயணக்கட்டுரை எழுதினார்.
இவரின் தயமை, குழந்தை வைத்தியம் போன்ற நூல்கள் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இவரது கதைகளில் குடும்ப அமைப்பும்,பெண்களின் உணர்வுகளும் அதிகம் இடைபெற்றன."என் நாவல்களில் கதாநாயகிகளுக்கே முக்கிய பாகத்தை அனுபவிப்பார்கள்.கதாநாயகிகளே பிரகாசிப்பார்கள்" என்பார் இவர்.

அரக்கு மாளிகை,மிதிலா விலாஸ்,வசந்தகால மேகம்,அம்மா எனக்காக,காலம் முழுதும் காத்திருப்பேன்'லட்சியவாதி,காஞ்சனையின் கனவு ஆகியவை இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

இவருடைய சகோதரி நித்யா மூர்த்தி என்பவரும் ஓர் எழுத்தாளரே. 1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் “இரண்டாவது மலர்” என்கிற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்த லட்சுமி அதனை முடிக்கும் முன்பே இறந்து விட அதனை எழுதி முடித்தவர் நித்யா மூர்த்தி.


No comments:

Post a Comment