Wednesday, April 15, 2020

20- வாசந்தி




பங்கஜம் எனும் இயற்பெயர் கொண்ட வாசந்தி, 1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் நாள் தும்கூரில் பிறந்தார். 

மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். 

நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர்
இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை (CUT OUTS,CASTE AND CINE STARS) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது.

பெங்குவின் பதிப்பகத்திற்காக "The World of Tamil Politics"  என்ற நூலை எழுதினார்.தொடர்ந்து தமிழகத்தில் திரை சார்ந்து அரசியலில் பிரபலமான ஒருவரைப் பற்றி எழுத பெங்குவின் நிறுவனம் அவரைக் கெட்டுக் கொண்டது.அப்போதுதான் ஜெயலலிதா அரசியலில்  பிரபலமாகிக் கொண்டிருந்தார்.அதனால் Jeyalalitha A Portrait என்ற தலைப்பில் வாசந்தி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கினார்.

2011 ஆம் ஆண்டு புத்தகம் முடிக்கப்பட்டது.ஜெயலலிதாவின் பிறப்பு முதல் படிப்பு வரை,சினிமா வாழ்க்கை,வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்கள், கலைத்துறையில் வெற்றி,சொந்த வாழ்க்கை,அரசியலில் கண்ட தோல்வி,வெற்றி ஆகியவற்ரை மையமாகக் கொண்டு அந்நூல் எழுதப்பட்டிருந்தது.ஆனால்..அப்புத்தகத்தில் சொல்லியுள்ள சில தகவல்களுக்காக, ஜெயலலிதா, வாசந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.இதனைத் தொடர்ந்து 2012ல் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது

முதல் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, "அம்மா" என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இரண்டாவது முறையாக எழுதினார்.

பஞ்சாப்,இலங்கை,ஃபிஜி நாடுகளின் இனப்பிரச்னைகளை பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள்

மௌனப்புயல்

நிற்க நிழல் வேண்டும்

தாகம்

ஆகியவை.மௌனப்புயல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்ய அகடெமி விருதினைப் பெற்றது.

சமூக நாவலான, "ஆகாச வீடுகள்" இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழிப்பெயர்ப்புக்கு உத்திர பிரதேசத்து சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.



"மூங்கில் பூக்கள்" என்ற நவால் புகழ்பெற்ற மலையாள இயக்குநர் பத்மராஜன் இயக்கத்தில் "கூடெவிட" என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமானது.

இலங்கைப் பிரச்னை, சீக்கியர் பிரச்னை போன்றவற்றையும் எழுத்தில் வடித்தவர் இவர்.  

தவிர்த்து, நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார்.  எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய "வாஸந்தி சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்..சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது..


இவரின் வேறு சில நூல்கள்
  • கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
  • சுருதி பேதங்கள்
  • வீடுவரை உறவு
  • யாதுமாகி
  • ஒரு சங்கமத்தைத் தேடி
  • நான் புத்தனில்லை
  • புரியாத அர்த்தங்கள்
  • மீண்டும் நாளை வரும்
  • அம்மணி
  • கடைப்பொம்மைகள்
  • நிஜங்கள் நிழலாகும்போது
  • தீக்குள் விரலை வைத்தால்
  • மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
  • பாலும் பாவையும்
  • ஜனனம் (நாவல்)
  • பொய்முகம் (நாவல்)
  • வேர் பிடிக்கும் மண் (சிறுகதைகள்)
  • புதியவானம்

எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாமல் தொடர்ந்து தன் கருத்தினைத் தெரிவிப்பதில் உறுதியாய் இருப்பவர்.

வாசந்தியின் எழுத்துகள் கூர்மையுடன் வாசிக்கப்பட வேண்டியவை.

No comments:

Post a Comment